SIVAKASI WEATHER
மழையால் திடீர் தட்டுப்பாடு : பட்டாசு விலை 15 சதவீதம் உயர்வு

05-10-2017
மழையால் திடீர் தட்டுப்பாடு : பட்டாசு விலை 15 சதவீதம் உயர்வு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 850க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில் சரவெடி, புஸ்வாணம், சங்கு மற்றும் பேன்சி ரக வெடிகள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. 1 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் பட்டாசு தொழில் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தாண்டு வட மாநில ஆர்டர்கள் பெருமளவில் குறைந்து விட்டதால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி மந்த கதியில் நடைபெற்று வந்தது. பட்டாசு ஆலைகளில் நடந்த விபத்து காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆப் சீசன் மற்றும் தீபாவளி பண்டிகை விற்பனைக்கு என இரண்டு ரக விலை பட்டியல் தயாரித்து பட்டாசு விற்பனை செய்துவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆப் சீசன் (தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஆர்டர்) ஆர்டர் போதிய அளவில் இல்லாததால் கடந்த ஆண்டு விலைக்கே பட்டாசுகளை விற்பனை செய்து வந்தனர். பட்டாசு விற்பனை கடந்த சில தினங்களாகவே மந்தமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், சிவகாசி பகுதியில் இந்தாண்டு ஆடி மாதம் துவக்கம் முதலே மழை பெய்ய துவங்கியது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கட்டாயப்படுத்தபட்டுள்ளது.

இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வட மாநிலங்களுக்கு அதிகளவில் சரக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உள்ளூர் விற்பனைக்கு போதிய சரக்குகள் இல்லை. அன்றாடம் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் மட்டுமே உள்ளூர் மற்றும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பணி பாதிப்படைந்துள்ளதால் விலை 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 15 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது’ என்றார்.


News & Events
top