SIVAKASI WEATHER
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறைவடைந்தது

16-10-2017
Courtesy: The Hindu

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறைவடைந்தது: ஆலைகளுக்கு 2 மாதம் விடுமுறை - தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ்

தீபாவளிப் பண்டிகை நெருங்கியதையொட்டி சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி நேற்றுடன் முடிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் 25 சதவீத போனஸ் அளிக்கப்பட்டது.

இம்மாதம் 18-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று வரை இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டியில் பட்டாசுக்கு 28 சதவீத வரி உயர்வு, வட மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க நீடித்து வந்த தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடக்கத்திலிருந்தே பட்டாசு உற்பத்தி மந்தமாக இருந்து வந்தது.

மேலும், கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு வெளி மாநில வியாபாரிகளும் ஆர்டர்கள் கொடுக்க பெரிதும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனாலும், கடந்த மாதத்தில் வெளி மாநிலங்களிலிருந்து பட்டாசுக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியதால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். பட்டாசு உற்பத்தியும் விறுவிறுப்படைந்தது. ஆனாலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிவகாசியில் சுமார் 40 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைவுதான் என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

இருப்பினும், ஆர்டர்களுக்கு ஏற்றவாறு இறுதிக்கட்டத்தில் பட்டாசுகளைத் தயாரித்து அனுப்பிவைக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. ஆனாலும், தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் முழு ஈடுபாடு காரணமாக பல பட்டாசு ஆலைகளில் கடந்த ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கான பட்டாசு உற்பத்தி நேற்றுடன் நிறைவுற்றது.

அதைத்தொடர்ந்து, நேற்று மாலையில் அனைத்துப் பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதோடு, தற்காலிக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் தொகையும் வழங்கப்பட்டது. அதோடு, புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளும் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டன. 2 மாதங்களுக்குப் பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கான உற்பத்தி தொடங்கப்படும்.


News & Events
top