SIVAKASI WEATHER
தவறுதலாகக் கிடைத்த லட்சங்களைத் திருப்பியளித்த சிவகாசிப் பெண்

27-07-2018
ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக்குறைவாகக் கொடுத்துவிட்ட கடை முதலாளியிடம் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளார், சிவகாசியைச் சேர்ந்த பெண் டெய்லர் ஒருவர். வாங்கிய பணத்தையே இல்லை என ஏய்க்கும் இந்தக் காலத்தில், தன் நேர்மையால் சிகரமாக உயர்ந்திருக்கும் அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்தவர், சிவசங்கரி. 10 ஆண்டுகளாக டெய்லரிங் தொழிலில் உள்ளார். சிவகாசியில் உள்ள வாசன் ஜவுளிக் கடைக்குத் துணி வாங்கச் சென்றிருக்கிறார். வீட்டுக்கு வந்து பையை எடுத்துப் பார்த்தால், அதனுள் துணிக்குப் பதிலாகக் கட்டுக் கட்டாகப் பணம். மொத்தம், பணம் எட்டரை லட்சம் ரூபாய். உடனடியாகக் கடைக்குச் சென்று திருப்பிக்கொடுத்துள்ளார். அந்த நேர்மை உள்ளத்தை நேரில் சந்தித்தோம்.

“நான் வீட்டிலேயே பிளவுஸ், சுடிதார் எனத் தைத்துவருகிறேன். 9-ம் வகுப்பு வரையே படிச்சிருக்கேன். என் கணவர் கம்ப்யூட்டர் டிசைனர். எனக்கும் டிசைனிங் மீது ஆர்வம் உண்டு. அதை என் டெய்லரிங்கிலும் செய்யறேன். எனது ரெண்டு குழந்தைகள். 24-ம் தேதி, மெட்டீரியல்ஸ் வாங்கறதுக்காக, என் அண்ணன் பொண்ணைக் கூட்டிட்டுப் போனேன். நூல் கடையில் கலர் நூல்கள் வாங்கிட்டு, ஃபேன்ஸி பிளவுஸ் வாங்கறதுக்கு வாசன் ஜவுளிக் கடைக்குப் போனோம். அங்கேதான் வாடிக்கையாக மெட்டீரியல் வாங்குவேன். 3 கலர் ஃபேன்ஸி பிளவுஸ் வாங்கினேன். அப்போ, போன் வந்ததாலே கஸ்டமர்கிட்டே பேசிட்டே பையை வாங்கிட்டு வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் வேற வேலைகளைப் பார்த்துட்டு, அப்புறமா துணியைத் தைக்கிறதுக்காகப் பையைத் திறந்துப் பார்த்தேன். ரெண்டாயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்துச்சு. அதைப் பார்த்ததும் மிரண்டுட்டேன். கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுட்டது. கடை முதலாளி தப்பா பையை மாத்திக்கொடுத்திருக்கிறது புரிஞ்சது. உடனே, என் அண்ணனோடு அந்தக் கடைக்குப் போய் திருப்பிக்கொடுத்தேன். ஏதோ ஞாபகத்தில் மாத்திக்கொடுத்துட்டதா சொன்னாங்க. `நானும் போனில் பேசிட்டே பையை வாங்கினதால கவனிக்கலை'னு சொன்னேன். அப்புறம், போலீஸில் எழுதி வாங்கிட்டு அனுப்பினாங்க. அந்தப் பணத்தைக் கடையில் ஒப்படைக்கிற வரை பெரிய பாரமாவே இருந்துச்சு. அதைக் கொடுத்த பிறகுதான் மனசு லேசு ஆச்சு. இதை அவங்க ஃபேஸ்புக்ல போட்டிருக்காங்க போல. ஆளாளுக்கு போன் பண்ணி பாராட்டுறாங்க. இதுக்கு எதுக்குங்க பாராட்டு? என் சொந்தக் காசையா தானம் பண்ணினேன். உழைச்சுச் சாப்பிடறது போதும்ங்க'' என்கிறார் வெள்ளந்தியாக.

இவரது நேர்மைக்கு ஒரு ராயல் சல்யூட்.


News & Events
top