SIVAKASI WEATHER
சிவகாசியில் ½ மணி நேரம் பூட்டப்பட்ட ரெயில்வே கேட்

08-09-2018
சிவகாசியில் ½ மணி நேரம் பூட்டப்பட்ட ரெயில்வே கேட்: சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்கள் அவதி

மதுரை–செங்கோட்டை இடையே தினமும் 3 முறை பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே கேட்டை கடந்து சென்றது. இந்த ரெயில் கடந்து செல்வதற்கு முன்னதாகவே விருதுநகரில் இருந்து செங்கோட்டையை நோக்கி ஒரு பராமரிப்பு வாகன ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தை கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான ரெயில்வே கேட் முன்னதாகவே மூடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்ல வேண்டிய ரெயில் சிவகாசியை நோக்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விருதுநகரில் இருந்து வந்த பராமரிப்பு ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் செங்கோட்டை–மதுரை ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்துக்குள் வந்த பின்னர் அங்கிருந்து பராமரிப்பு ரெயில் செங்கோட்டையை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த 2 ரெயில்களும் அடுத்தடுத்து சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே கேட்டை கடந்த சென்றதால் அந்த ரெயில்வே கேட் ½ மணி நேரமாக மூடப்பட்டு இருந்தது. இதனால் சாலையில் இருபுறங்களிலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றது. இதனால் இரட்டை பாலத்தில் உள்ள விளாம்பட்டி–சிவகாசி ரோட்டில் இருந்து வாகனங்கள் எந்த திசைக்கும் செல்ல முடியாத நிலை உருவானது. சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து அனைவரும் தவித்தனர்.

நெரிசல் ஏற்பட்ட போது வழக்கமாக ரெயில்வே கேட் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்படும் போக்குவரத்து போலீசார் கூட நேற்று பணியில் இல்லை. இதனால் பொதுமக்கள் சாட்சியாபுரம் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல பெரும் சிரமப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகள் கூட இன்னும் தொடங்கப்படாத நிலை தான் நீடிக்கிறது. எனவே அவசர நேரங்களில் பொதுமக்கள் செல்ல அவசர வழி ஒன்றை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


News & Events
top