SIVAKASI WEATHER
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு அதிபர்கள்-தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

21-12-2018
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு அதிபர்கள்-தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கடுமையான விதிகளால் பட்டாசு தொழில் நலிவடையும் சூழல் ஏற்பட்டது. விதிகளை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சிவகாசியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு அதிபர்கள், தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம், பட்டாசு உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஊழியர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து வேன், கார் மூலம் விருதுநகருக்கு பேரணியாக வந்தனர்.

தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூடினர். பின்னர் அவர்கள் அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

சிறிது நேரத்தில் பட்டாசு தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

விருதுநகரில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் திரண்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மேற்பார்வையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் எட்டயபுரம் 4 வழிச்சாலைக்கு திருப்பி விடப்பட்டது.

மதுரையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மண்டேலா நகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக திருப்பி விடப்பட்டது.


News & Events
top