SIVAKASI WEATHER
News & Events
கலையிழந்த தொழில் நகரம்

26-01-2019
கலையிழந்த தொழில் நகரம்

சிவகாசியிலிருந்து திரு. பெருமாள்சாமி எழுதுகிறார்,

மொத்த சிவகாசியுமே கலையிழந்து கிடக்கிறது. தமிழ்நாட்டுக்கு எப்போதுமே சிவகாசி ஒரு வரி ஆச்சரியம் அல்லது ஒரு நிமிட பெட்டிச் செய்தி, அவ்வளவுதான்.

உண்மைதானே . யோசித்துப் பாருங்கள் . சிவகாசியை உங்களுக்கு எப்படித் தெரியும் ?

ஒரு பத்தவைக்காத பத்தாயிரம் வாலா சரவெடியை துண்டுபோல அணிந்து கொண்டு விஜய் நிற்கும் சிவகாசி பட போஸ்டர் வழியாக , அந்தப் படத்தில் வரும் “பஞ்ச் டயலாக்” வழியாக சிவகாசியை ரசித்திருப்பீர்கள்.

அல்லது

அடிக்கடி நடக்கும் பட்டாசு வெடி விபத்துக்களை செய்தித்தாள்களில் பார்த்து சில சொற்ப வினாடிகள் “ ஐய்யோ, பாவம் “ என கடந்திருப்பீர்கள். தொலைக்காட்சிகள் , வெடி விபத்தில் கருகிப்போன உடல்களை வைத்து , ஒரு மணி நேர விவாதம் நடத்தியிருக்கும்.
பொது சமூகத்திற்கு சிவகாசி அவ்வளவுதான்.

ஆனால் சிவகாசி அதுவல்ல.

இது வெயில் தகிக்கும் கந்தக பூமி.

சுறுசுறு, துரு துரு உழைப்பாளிகள் எப்போதும் பம்பரமாய் உழைக்கத் தாயாராயிருக்கும் இந்தியாவின் குட்டி ஜப்பான்.

சென்னை உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவின் தீபாவளி , புத்தாண்டு , இன்ன பிற கொண்டாடங்களுக்காக தினமும் பாஸ்பரஸ் பவுடரில் குளிக்கும் ஊர் இது.

தினமும் ஐந்து மணிக்கு தூக்குச்சட்டியை வயர் கூடையில் அடைத்து , ஹார்ன் சத்தத்தை அலறவிட்டு ஊரையே எழுப்பி வரும் பயராபீஸ் பஸ்ஸில் பாதி ஊரே கிளம்பிச் செல்லும் . இங்கு வேலைக்குச் செல்லாத “ ஹோம் மேக்கர்கள் “ எண்ணிக்கை மிகக் குறைவு. ஆறரை மணிக்கு வீடு திரும்பி அடுக்களையில் அடுத்த ஷிப்ட் ஆரம்பிக்கும் அம்மாக்களும் , அக்காக்களும் சிவகாசியை சுற்றியுள்ள எல்லா கிராமங்களிலும் உண்டு.

அரசின் டாஸ்மாக்கிற்கு அதிகம் பலியாகியது அநேகமாய் இந்த ஊராகத்தான் இருக்கும். எந்த பயர் ஒர்க்ஸும் சொந்தமாக தொழிலாளர்களை வைத்துக் கொண்டதில்லை. 30 வருடங்களாக வேலை செய்வோரும் இங்கு தினக்கூலிகள்தான். பயர் ஒர்க்ஸை நடத்துவது குட்டி “காண்ட்ராக்ட்” முதலாளிகள்தான். கம்பெனியே இடமும் , பொருளும் தரும். ஆட்களை கூட்டி வந்து வெடி செய்து கொடுத்தால் கமிசன் தொகையை இந்த குட்டி காண்ட்டிராக்ட் முதலாளிகளுக்குத் தரும். அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதை கூலியாட்களுக்குத் தருவர்.

சிவகாசியின் சிறு , குறு உள்ளூர் வணிகம் மொத்தமுமே இந்த சனிக்கிழமை சம்பளத்தில்தான் உயிர்ப்பெறும். சாலையெங்கும் , ஊரின் மூலையெங்கும் பெருகிக் கிடகும் அரசின் டாஸ்மாக்குகள் , இந்த கூலியாட்களை போதையாக்கி அவர்களின் வாரச்சம்பளத்தில் பாதியை சட்டைப்பையில் கையை விட்டு எடுத்துக் கொள்ளும்.

உலக வெடி மார்கெட்டில் சீனா முதலிடம் .சீனாவிடம் தொழில் கற்றுக் கொண்ட நகரம்தான் சிவகாசி என்றாலும் இன்று சீனாவுக்கு போட்டியாக உலக அரங்கில் கம்பீரமாக நிற்கிறது.

இத்தனை ஆயிரம் கோடிகள் வணிகம் நடந்தும் இத்தனை ஆண்டுகள் அரசால் முறைப்படுத்தப்படாத தொழில் இது. இப்போது திடீர் மாற்றங்கள் கொண்டுவரப்படும் போது , பெரு முதலாளிகள் தினக்கூலிகளை பகடை காய்களாக்கி காய் நகர்த்துகிறார்கள்.

அனைத்தையுமே இங்கு குட்டி காண்ட்ராக்ட் முதலாளிகளை வைத்து நடத்தியதால் இங்கு கம்பெனிகள் எதற்கும் பொறுப்பேற்பதில்லை. உற்பத்தி முறைக்கும் ,விற்பனை விலைக்கும் எந்த ஒழுங்கும் இதுவரை இல்லை. அவ்வப்போது நடக்கும் ரெய்டுகள் அதிகாரிகளின் வங்கி இருப்பை உயர்த்துவதற்குத்தான் என்பது இங்குள்ள பள்ளிச் சிறுவனுக்கும் தெரியும்.

இப்போது அரசு , பசுமைப் பட்டாசு , திடீர் முறைப்படுத்தல் என இறங்கியதால் முதலாளிகள் தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். 100 நாட்களாகிறது. யாருக்கும் எந்த வேலையுமில்லை. பயர் ஒர்க்ஸில் சம்பாதித்த காசை பள்ளி , கல்லூரி என இன்வெஸ்ட் செய்த முதலாளிகள் அதை பார்க்கச் சென்றுவிட்டனர்.

தினக்கூலிகளும் , குட்டி காண்ட்ராக்டர்களும் நகையை அடமானம் வைத்து அரிசி வாங்கி உண்கிறார்கள். ஏற்கனவே நகையை அடமானம் வைத்த , அல்லது நகையெதுவும் இல்லாத தினக்கூலிகள் விறகு வெட்டி கடைகளில் போட்டு அரிசி வாங்குகிறார்கள்.

சிவகாசி பஜாரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடையொன்றில் கேழ்வரகு ரொட்டி வாங்கச் சென்றேன். அவர் வியாபாரமே இல்லையென்பதால் அதை இப்போதெல்லாம் போடுவதில்லை என்றார்.

குட்டி காண்ட்ராக்ட் முதலாளியாக இருக்கும் நண்பன் ஒருவனுடன் திருத்தங்கலில் ஒரு கடைக்கு டீ குடிக்கச் சென்றேன். அவனிடம் வேலை பார்த்த பெண் ஒருவர் அங்கு வெங்காயம் வெட்டிக் கொண்டு , தட்டு கழுவிக் கொண்டிருந்தார். எப்போதும் இருபது முப்பது பேராய் இருக்கும் அந்தக் கடையிலும் கூட இப்போது ஐந்தாறு பேரே டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜவுளிக்கடை , கம்மங்கூழ் கடை , கோயில் வாசல் பூக்கடை , செருப்புக்கடை என எல்லா கடைகளும் இந்த தினக்கூலிகளைப் போலவே நீதிமன்ற தீர்ப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. செய்தியே பார்த்து பழக்கமில்லாத சனங்கள் எப்போதாவது , எந்தச் சேனலிலாவது சிவகாசியைப் பற்றிய செய்தி வந்துவிடாதா என ரிமோட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 100 நாட்களாக பட்டினியில் கிடக்கும் இந்த சிவகாசியைக் கண்டுகொள்ளாமல் “தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இந்தியா” வைப் போல நடந்து கொள்கிறது , கடந்து செல்கிறது – தமிழகம்.


News & Events
top