SIVAKASI WEATHER
பொது மக்கள் ஒன்றிணைந்து சீரமைத்த சிவகாசி பெரியகுளம் கண்மாய்

01-08-2019
பொது மக்கள் ஒன்றிணைந்து சீரமைத்த சிவகாசி பெரியகுளம் கண்மாய் : மழை பெய்து நிரம்புமா என எதிர்பார்ப்பு

சிவகாசி நகருக்கு நீர் ஆதாரமாக இருந்து வந்த பெரியகுளம் கண்மாய் மற்றும் சிறுகுளம் கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த கண்மாய்க்கு நீர் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே இந்த கண்மாய் வறண்டுபோனதற்கு காரணம் என்று புகார் கூறப்படுகிறது.

மண் மேவிக் கிடந்த இந்த கண்மாயின் நீர் வரத்து பாதைகளில் உள்ள அடைப்புகளை நீக்கம், கண்மாயை தூர்வாரவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி சிவகாசியில் உள்ள லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், ஜேசீஸ் சங்கம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சக உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து பசுமை மன்றம் என்ற புதிய அமைப்பை தொடங்கி பெரியகுளம் கண்மாயை தூர்வாரும் பணியை தொடங்கினர். கடந்த 27 நாட்களில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் நீர்வரத்து பாதையை தூர்வாரி உள்ளனர்.

இதேபோல் ஆனையூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி மண்மேவிக் கிடந்தது. இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர். இதை தொடர்ந்து கருமன் கோவில் பின்புறம் உள்ள நீர்வரத்து பகுதி சரி செய்யப்பட்டது. முனீஸ்நகர், கட்டளைப்பட்டி, செங்குளம் வழியாக பெரியகுளம் வரை உள்ள பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை ஆர்.டி.ஓ. தினகரன், சிவகாசி நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி பெரியகுளம் கண்மாய் நீர் நிரம்பி இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிவகாசி நகர் பகுதி, அதனை சுற்றியுள்ள பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் மக்களின் தண்ணீர் தேவையை இந்த பெரியகுளம் கண்மாய் பூர்த்தி செய்துள்ளது. தற்போது தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மழை பெய்து இந்த பெரிய குளம் கண்மாய் நிரம்பினால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


News & Events
top