SIVAKASI WEATHER
திருத்தங்கல் நகராட்சியில் 21 சுகாதார வளாகங்களுக்கு பூட்டு

06-12-2019
திருத்தங்கல் நகராட்சியில் 21 சுகாதார வளாகங்களுக்கு பூட்டு : மக்கள் அவதி; அதிகாரிகள் வேடிக்கை

சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் 21 சுகாதார வளாகங்கள் பூட்டிக் கிடப்பதால் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான பணம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் ஏராளமான சுகாதார வளாகங்கள் முடங்கிக் கிடப்பது நகராட்சி மக்களிடத்தில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ நிதி, பொதுநிதி உட்பட பல்வேறு அரசின் வளர்ச்சி நிதியில் லட்சக்கணக்கான மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பூட்டிக் கிடக்கின்றன. 18வது வார்டு, 14வது வார்டு, 2வது வார்டு, 3வதுவார்டு 5வது வார்டு, 7வது வார்டு என நகராட்சியில் சுமார் 21 சுகாதார வளாகங்கள் பூட்டியே கிடக்கின்றன.

இதில் பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. 7வது வார்டில் உள்ள சுகாதார வளாகம், ரயில்வே ஸ்டேஷன் அருகே 2வது வார்டில் உள்ள சுகாதார வளாகம், 18வது வார்டில் மாயானம் செல்லும் வழியில் உள்ள சுகாதார வளாகம் திறந்த ஒரு சில நாட்களில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வளாகம் பயன்படுத்தாமலே சேதமடைந்து காணப்படுகின்றது. நகராட்சியில் பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடப்பதால் செங்குளம் கண்மாய் சாலை, மயானச்சாலை மற்றும் பல பகுதிகளில் உள்ள முட்புதர்களையும் திறந்த வெளிக்கழிப்பிடமாக நகராட்சி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நகராட்சியில் பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சிலர் வாறுகால் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் குடியிருப்பு வாசிகள் பெரும் சுகாதார சீர்கேட்டை சந்தித்து வருகின்றனர். திருத்தங்கல் நகராட்சியில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சிபிஎம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,‘‘முறையாக பராமரிப்பு செய்தால் கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியும். பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் அலட்சியத்தால் நகராட்சியில் பெரும்பாலான கழிவறைகள் பூட்டிக் கிடக்கின்றன’’என்றார்.


News & Events
top