SIVAKASI WEATHER
பட்டாசு வேலை செய்து குரூப்1 தேர்வில் வெற்றி : சிவகாசி மாணவிக்கு குவியும் பாராட்டு

02-01-2020
பட்டாசு வேலை செய்து குரூப்1 தேர்வில் வெற்றி : சிவகாசி மாணவிக்கு குவியும் பாராட்டு

பட்டாசு வேலை செய்து டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 4வது இடம் பிடித்த சிவகாசியை சேர்ந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் மகேஸ்வரி. பட்டாசு தொழிலாளியின் மகளான இவர் சிறு வயது முதல் கல்வியிலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் பள்ளிக்கல்வி முதல் கல்லூரி வரையில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்.

இவரது பெற்றோர் பட்டாசுக்கான மூலப்பொருள் தயாரிக்கும் பணியை வீட்டில் இருந்தபடி செய்து வருகின்றனர். குடும்ப வறுமைக்காகவும் தனது குரூப் தேர்வு பயிற்சிக்கான செலவுக்காகவும் பெற்றோருடன் பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிப்பு பணியில் மகேஸ்வரி ஈடுபட்டு வந்தார். வயது முதிர்ந்த தாய், தந்தை ஆகிய இருவருமே நாள் முழுவதும் பட்டாசு வேலை செய்து 300 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே வருமானம் ஈட்டி வருகின்றனர். பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதற்காக பட்டாசு வேலை செய்து நாள்தோறும் 150 ரூபாய் சம்பாதித்து வந்துள்ளார் மகேஸ்வரி. இதனிடையே தனது கல்வியையும் விடாமல் கற்று வந்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான இவர், அரசு நிர்வாகப் பொறுப்பில் உள்ள பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குரூப் ஒன் தேர்வு எழுதி வந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக இவர் துவண்டு போய் விடவில்லை. தன்னம்பிக்கையுடன் போராடி வந்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றி பெறாத நிலையில்தான் இப்போது நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 362 பேரை கொண்ட தர வரிசை பட்டியலில் நான்காவது இடம் பிடித்து மகேஸ்வரி சாதனை படைத்துள்ளார். நாள்தோறும் 6 முதல் 8 மணி நேரம் வரை படித்து வந்ததாகவும் மீதி நேரங்களில் வீட்டு வேலைகளையும் செய்து பின்னர் பெற்றோருக்கு துணையாக பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்ததாக கூறுகிறார் மகேஸ்வரி.

வெற்றிக்கு ஏழ்மை ஒரு பொருட்டில்லை என நிரூபித்து காட்டி இருக்கும் மகேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

- Puthiyathalaimurai

- www.sivakasiweekly.com


News & Events
top