SIVAKASI WEATHER
சிவகாசியில் ரூ.50 கோடி காலண்டர் வர்த்தகம் பாதிப்பு

22-08-2020
சிவகாசியில் ரூ.50 கோடி காலண்டர் வர்த்தகம் பாதிப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்திய தொழில் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்கம் ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசியையும் விட்டு வைக்கவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழிலை தொடர்ந்து தற்போது, காலண்டர் உற்பத்தி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. நகை, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் ஆண்டுதோறும் சிவகாசியில் மொத்தமாக லட்சக்கணக்கில் காலண்டர் ஆர்டர் கொடுத்து, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். இதற்கான ஆர்டரை 4 மாதத்திற்கு முன்பே பிரிண்டிங்- பைண்டிங் நிறுவனங்களுக்கு கொடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஆல்பம் வெளியிட்டு உற்பத்தியை தொடங்கிய காலண்டர் நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பரவலால், நடப்பாண்டில் அதற்கான பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல வணிக நிறுவனங்களில் தொழில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த முறை முன்னணி நிறுவனங்களின் காலண்டர் ஆர்டர் போதிய அளவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியில் 50 சதவீத காலண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி வர்த்தக பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து காலண்டர் உற்பத்தியாளர் கூறுகையில், ‘‘2021க்கான புதிய காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் ஆடிப்பெருக்கன்று தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், உற்பத்தியை தொடங்க முடியவில்லை. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகளவு ஆர்டர்கள் வரும். அதுவும் தற்போது இல்லை. இதனால் இந்த ஆண்டு காலண்டர் உற்பத்தி 50 சதவீதத்துக்கும் மேல் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது’’ என்றார்.


News & Events
top