SIVAKASI WEATHER
எல்லோரும் இந்நாட்டு செய்தியாளர்களே

28-03-2018
- சி.என்.ராமகிருஷ்ணன் , Nakkheeran

’எல்லோரும் இந்நாட்டு செய்தியாளர்களே!’- உணர்வுடன் உரைத்திட்ட இதழியல் மாணவர் கூட்டமைப்பு!

சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூரில் இயங்கும் ஏ.ஏ.ஏ.பொறியியல் கல்லூரியில், இந்திய மின்னணு இதழியலாளர் சங்கம் (DiJAI) சார்பில், இதழியல் மாணவர் கூட்டமைப்பு ஒன்றை துவக்கினார்கள். ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி, அரசன் கணேசன் பாலிடெக்னிக், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, அருப்புக்கோட்டை ரமணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களிடையே உரை நிகழ்த்திய இந்திய மின்னணு இதழியலாளர் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் “1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இன்டர்நெட்டை வணிக பயன்பாட்டுக்காக இந்தியாவில் கொண்டுவந்தார்கள். 22 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்றைக்கு இன்டர்நெட் ஒரு மகா பூதம் மாதிரி வளர்ந்திருக்கிறது. இன்டர்நெட்டை உபயோகித்து செய்யக்கூடிய ஜர்னலிசத்தைத்தான் நாம் டிஜிட்டல் ஜர்னலிசம் என்கிறோம். அடுத்து, வெப்சைட், சோசியல் மீடியா என்று ஒவ்வொருவிதமாக கம்யூனிகேசன் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் 35 சதவீதம் பேர் இன்டர்நெட் உபயோகிக்கிறார்கள். மொபைல் யூஸ் பண்ணுகிறார்கள். 46 கோடி பேர் பயனடைகிறார்கள்.

டிஜிட்டல் ஜர்னலிசத்தில் டெக்ஸ்ட் மட்டும் கொடுத்தால் படிக்கிறது கஷ்டம். அதனால் படங்களையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்க வேண்டும். இப்போது இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் ஒரு ஜர்னலிஸ்ட் ஆக உருவாகி வருகிறார்கள். என் கையில் ஒரு மொபைல் இருக்கு. என் கையில் ஒரு இன்டர்நெட் இருக்கு. என் கையில் ஒரு லேப்டாப் இருக்கு. இன்றைக்கு நாமே ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம். ஒரு வெப்சைட் யூஸ் பண்ணலாம். நாமதான் எடிட்டர்.. நாமதான் பப்ளிஷர்.. இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், டெக்னாலஜியை எவ்வளவு தவறாகப் பயன்படுத்துகிறோம் தெரியுமா? அதாவது ஃபேக் நியூஸ். பள்ளி வேன் ஆக்சிடெண்ட் ஆயிருச்சு.

உயிருக்குப் போராடும் 30 பள்ளிக்குழந்தைகளுக்கு உடனடியாக ரத்தம் தேவை இந்த ஃபேக் நியூஸ் ஐந்து வருடங்களாக ஓடிக்கிட்டிருக்கு. மொபைலில் எது வந்தாலும் எல்லாவற்றையும் நாம் படித்துவிடுவதில்லை. டக்குன்னு ஒரு ஃபார்வேர்ட். காலையில் எந்திரிச்சதும் பல் துலக்குகிறோமா? குளிக்கிறோமா? அதெல்லாம் பிறகுதான். முதலில் ஃபார்வேர்டிங். ஊருல எவன் எவனோ அனுப்புற குப்பையை எல்லாம் ஃபார்வேட் பண்ணிக்கிட்டே இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.” என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்தார்.

டிஜிட்டல் ஜர்னலிசத்தை நுட்பமாகக் கற்று, மக்களுக்குத் தேவையான செய்தியை மட்டுமே அளித்திட, ஆர்வத்துடன் ஆயத்தமாகி வருகிறார்கள் இளம் இதழியலாளர்கள்!



News & Events
top