SIVAKASI WEATHER
குரூப் 1 தேர்வில் வென்று டிஎஸ்பியாகும் சிவகாசி பெண்

25-01-2020
மேல்நிலைக் கல்வியை பாதியில் நிறுத்தியவர் : குரூப் 1 தேர்வில் வென்று டிஎஸ்பியாகும் சிவகாசி பெண்

பள்ளிக் கல்வியை தொடர முடியாத நிலையில், தொலைநிலைக் கல்வியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார் சிவகாசியைச் சேர்ந்த பெண்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் காமாட்சி. பிளஸ் 1 படித்தபோதே 2005-ல் இவருக்கு திருமணம் நடந்தது. இதனால், கல்வியைத் தொடர முடியவில்லை. திருமணத்துக்குப் பிறகு 2013-ம் ஆண்டு தனித் தேர்வு எழுதி பிளஸ் 2 படித்து 1070 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

குரூப்-4 தேர்வில் 2014-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இவர், மதுரை வேளாண் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது குரூப்- 1 தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளார். இது குறித்து காமாட்சி கூறியதாவது: எனது கணவர் பட்டாசு முகவர். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பணிக்குச் செல்லும் நிலையில், கல்லூரிசென்று பட்டப்படிப்பு முடிக்காததால்குருப் 1 தேர்வுகளில் வெற்றிபெற முடியுமா என சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் தொலைநிலைக் கல்வியில் 2018-ல் பிஏ. தமிழ் இலக்கியம் முடித்தேன். குரூப்-1 தேர்வு எழுதலாம் என நினைத்தபோது மதுரையிலுள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் குரூப் 1 தேர்வு எழுத எனக்கு நம்பிக்கை ஊட்டினார். அதற்கான தேடலையும் கற்றுக் கொடுத்தார்.

மதுரை கே.கே. நகரிலுள்ள அவரது பயிற்சி மையத்தில் கடந்த ஓராண்டாகப் படித்தேன். ஒரே முயற்சியில் 2019-ல் நடந்தகுரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் வெற்றிபெற்றேன். காவல் துறையில் டிஎஸ்பியாக தேர்வானது எனது கிராமத்துக்குப் பெருமை. இதைக் கேள்விப்பட்ட எங்களதுகிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த வெற்றிக்கு கணவர் மகாலிங்கம் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். இரவில் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். பெண் என்பதால் கிராமத்திலுள்ள பெண்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். இதனால், பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக டிஎஸ்பி பணியைத் தேர்ந்தெடுத்தேன். பார்வையற்றோருக்கு நல்ல கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எனது லட்சியம்.

தரமான புத்தகங்களைப் படித்தாலும், பயிற்சி மைய வழிகாட்டுதலும் தேவை. நாம் தவறு செய்யும்போது பயிற்சி மையம்சுட்டிக்காட்டும். தமிழில் தேர்வு எழுதி வெல்ல முடியுமா என பிறரின் அச்சத்தைப் புறம் தள்ளி வெற்றி பெற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


News & Events
top