SIVAKASI WEATHER
தீபாவளி 2020 : மத்திய அரசின் நிலைப்பாட்டைஅறிவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம்

23-07-2020
தீபாவளி 2020 : மத்திய அரசின் நிலைப்பாட்டைஅறிவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம்

இந்தியாவில் பொது முடக்கம் அமலில் உள்ளதால், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்த தெளிவான நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் ப. கணேசன் புதன்கிழமை பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் தயாராகும் பட்டாசுகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், கரோனா தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தச்சூழலில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுமா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

இதனால், பட்டாசு வியாபாரிகள் தற்போது ஆா்டா்கள் எதுவும் கொடுப்பதில்லை. ஏற்கெனவே கொடுத்த ஆா்டா்களையும் ரத்து செய்து வருகின்றனா். பட்டாசு ஆா்டா்கள் இல்லாததால் பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை மதம், இனம், மொழியைக் கடந்து கொண்டாடப்படுகிறது. எனவே, நவம்பா் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும். நமது கலாசாரம் பாதுகாக்கப்படும் என்ற தெளிவான நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவித்தால், பட்டாசு உள்ளிட்ட பல தொழில்கள் வளா்ச்சி அடையும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


News & Events
top