SIVAKASI WEATHER
தெருக்கட்டுப் பொங்கல் சீசன்

13-03-2022
சிவகாசியில் தெருக்கட்டுப் பொங்கல் சீசன்

சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல் என்று கூறப்படும், முத்தாலம்மன் திருவிழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு ஐந்து நாட்கள், 7 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்படும்.

இதற்காக தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வருவார்கள். பெண்கள் நேர்த்திகடன் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வருவார்கள். விழாவி்ன் நிறைவு நாளன்று தங்களது பகுதிகளிலிருந்து, சிவகாசி நகரில் நான்கு ரதவீதிகளில் முளைப்பாரி, பால்குடங்கள் ஏந்தி கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றுவந்து தங்களது பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

பின்னர் பூரண அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெருக்களில் உள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

தெருக்கட்டுப் பொங்கல் ஆரம்பித்த நாள் முதல் தினமும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெருக்கட்டுப் பொங்கல் விழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர்.


News & Events
top