12-04-2022 சிவகாசியிலிருந்து திரு. பாரத் குமார் எழுதுகிறார்; சிவகாசி பங்குனிப் பொங்கல் தமிழ் வருடத்தின் இறுதி மாதமான பங்குனி மாதத்தில் இந்த வருடம் நன்றாக முடிந்தது என்று அம்மனுக்கு நன்றி சொல்லும் விதமாக 10 நாள் திருவிழா எடுத்துக்கொண்டாதும் விழாக்காலமே பங்குனி பொங்கல். மக்களை பெற்ற மகராசி என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் மாரியம்மன் கோவில் விழாவிற்கு என்று ஒரு கருத்து அன்றிலிருந்து இன்று வரை மக்களிடம் இருக்கிறது. காலையில் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று கொடி மரத்திற்கு தண்ணீர் ஊற்றும் பழக்கம் இன்று வரை திருவிழாக்காலங்களில் தொடர்கிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா மக்கள் கூட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெறும். மற்ற ஊர்களில் இருக்கும் சிவகாசி மக்களும் பங்குனி பொங்கல் திருநாள் அன்று சிவகாசிக்கு வந்துவிடுகின்றனர் உலகின் எங்கிருந்தாலும். பத்து நாள் திருவிழாவில் தினம் தினம் மக்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர். முடிக்காணிக்கை, அக்னிச்சட்டி எடுத்தல், முத்து,உப்பு,கால்,கை போன்ற உருவங்கள் வாங்கி தங்களது வேண்டுதலை நினைத்து கடவுளுக்கு படைக்கும் வழக்கமும் பல வருடங்களாக தொடர்கிறது. ஒன்பதாம் திருவிழாவான கயிறு குத்து திருவிழா அன்று மக்கள் அனைவரும் வண்ண சாக்பீஸ் கொண்டு முகத்தில் புள்ளி இட்டு கையிலும் ஆடைகளிலும் வேப்பிலையுடன் அம்மனை வழிபட பெருந்திரளாக காலையில் கோவிலுக்கு செல்கின்றனர். வெயில் காலம் வர இருப்பதால் அம்மை போன்ற பெரும் நோய்கள் வரும் அதிலிருந்து மக்களை காப்பாற்றும் விதத்தில் இது போன்று மக்கள் வேடமிட்டு செல்கின்றனர். கயிறு குத்து அன்று காலை வேடமிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து குளித்து புத்தாடை அணிவது சிவகாசி மக்களின் வழக்கம். வடக்கு பண்டிகையான தீபாவளி திருநாளுக்கு பிறகு உள்ளூர் மக்களின் பண்டிகையான பங்குனி பொங்கலுக்கு மட்டும் தான் புது ஆடை எடுக்கும் பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. காலை அணிந்த புத்தாடையுடன் மாலை அம்மனை தரிசிக்க மக்கள் பெருந்திரளாக கூடுகின்றனர். சிவகாசி மட்டுமின்றி சிவகாசியை சுற்றி இருக்கும் அனைத்து கிராமங்களில் இருந்தும் மக்களின் வருகை மிக அதிகமாக இருக்கும் அந்த இரண்டு நாட்கள். பத்தாம் திருவிழாவான தேர் திருவிழா மாலை 4 மணி அளவில் தொடங்குகிறது. முதலில் சின்ன தேரை நான்கு ரத வீதிகளில் வேகமாக இழுத்து வந்து எல்லையை அடைய செய்கின்றனர் மக்கள். பின்பு பெரிய தேரில் மாரியம்மனை வைத்து ஊரில் இருக்கும் அனைத்து இளைஞர்கள் கூட்டமும் சேர்ந்து தேரின் வடத்தை பிடித்து மெதுவாக இழுத்து நான்கு ரத வீதியை சுற்றி வருவார்கள். (பல வருடங்களுக்கு முன்பு முருகன் கோவிலின் திருப்பத்தில் தேர் கவிழ்ந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். அதன் பின்பு தான் மர சக்கரங்களை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக இரும்பு சக்கரம் மற்றும் பிரேக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது. வருடம் சரியாக நினைவில்லை சிறுவயதில் தாத்தாவிடம் கேட்டது) தேர் எல்லையை அடைந்தவுடன் மகிழ்ச்சியில் கைகளைத் தட்டி எரிதேங்காய் எறிந்தும் தேர் திருவிழாவை முடிக்கின்றனர். தேர் திருவிழா முடிந்தவுடன் அம்மன் அன்ன வாகனத்தில் மஞ்சள் நீராட்டுடன் கோவிலுக்கு சென்று கொடி இறக்குதல் கடைசி திருவிழாவாக நடக்கிறது.கடைசி திருவிழா முடியும் அன்று அனைவரும் தங்கள் வீட்டிற்கு கருப்பட்டி மிட்டாய் வாங்கி செல்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பல தெய்வங்களின் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடலாம். ஆனால், தங்கள் மண்ணின் தெய்வத்தின் பண்டிகையை திருவிழாவாக கொண்டாடும்போது தான் அந்த ஊரின் மண்ணும் மக்களும் முழு மகிழ்ச்சி அடைகின்றனர் என்பதை தெளிவாக காண முடிகிறது தமிழகம் முழுதும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் நம் கண்முன்னே சிறப்பாக கொண்டாடப்படுகிறது குட்டி ஜப்பானின் பங்குனி பொங்கல். |