SIVAKASI WEATHER
சிவகாசி தொழிலை பாதுகாப்போம்

25-06-2023
சிவகாசியிலிருந்து திரு.அ.ராஜா சொர்ண சேகர் எழுதுகிறார்;

சிவகாசி தொழிலை பாதுகாப்போம் என் இனிய இலக்கிய சொந்தங்களே
1980களில் சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள்
என்ற பிரச்சினையை பூதாகரமாக டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற முன்னணி நாளிதழ்களில் எழுதி எழுதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டங்கள் மூலம் உரிமையாளர்களுக்கு அபராதம், சிறை என்று பல விதமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. நல்ல விஷயம் என்பதால் அனைவரும் ஆதரவு தந்ததால் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது
சின்னஞ் சிறுமிகள் தூக்கு வாளியில் தாவணி கொண்டு வந்து அதிகாரிகள் வரும் போது பெரிய மனுஷியாக கணக்கு காட்டுவதாக கதைகள் கவிதைகள் மலர்ந்தன. அதிகாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் கணக்கு பிள்ளைகள் போர்மன்கள் ஆகியோரின் காமப்பசிக்கு பெண் தொழிலாளர்கள் ஆளாவதாக புரட்சி கரமான படைப்புகள் பரிசு பெற்றன.

இதன் விளைவாக தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து பல ஆலை கள் மூடப்பட்டன. எந்திர தீப்பெட்டிகள் அசுர வேகத்தில் தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்தது. பல குடும்பங்கள் திருப்பூர் குடியாத்தம் போன்ற ஊர்களுக்கு குடிபெயர்ந்தன. அச்சுத்தொழில் அதி நவீன வசதிகளுடன் எளிதாக மாறியதால் அனைத்து ஊர்களிலும் அச்சுத்தொழில் வளரத் தொடங்கியதால் பல சிறிய அச்சகங்கள் மூடப்பட்டன.

மிஞ்சியிருக்கும் பட்டாசு தொழிலை சீனா பட்டாசு, பட்டாசு வெடிக்க மணி நேரம் ஒதுக்கீடு, பசுமை பட்டாசு, சத்தம் இல்லாமல் வேட்டு, பல மாநிலங்களில் கொரோனா தடை சுற்றுச்சூழல் மாசு என்று பல விதமான பூதங்கள் மிரட்டி வரும் நிலையில் சிவகாசி முகநூல் எழுத்தர்களுக்கு அன்பு வேண்டுகோள்
பட்டாசு தொழிலுக்கு எதிரான எந்த கருத்தையும் கதை கவிதை நகைச்சுவை என்று எழுத வேண்டாம் பட்டாசு ஆலை விபத்துக்களை மிகைப்படுத்தி எழுத வேண்டாம் ஏதோ கொலைக்களத்துக்கு தொழிலாளர்கள் பணிக்கு செல்வது போல வும் மிக மிக வறுமையில் கசக்கிப் பிழியப்படுவதாகவும் உங்கள் கற்பனைகளை பதிவிட வேண்டாம் பட்டாசு உற்பத்திக்கு தடை கோரி வழக்குகள் நிலுவையில் உள்ளன அவர்கள் ஆதாரமாக ஆவணமாக முகநூலில் உள்ள பதிவு களை சமர்ப்பிக்க உதவி விடாதீர்கள் முகநூலில் பதிவு நொடியில் உலகம் முழுவதும் பரவும் என்று உணர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன் பட்டாசு தொழிலை பாதுகாப்போம் நம் எழுத்து வலிமையானது நம் கண்ணை நம் விரல் கொண்டு குத்தி விட இடம் கொடுத்து விடாதீர்கள் இந்த பதிவு முதலாளிகள் சார்பில் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

- www.sivakasiweekly.com


News & Events
top