சிவகாசி ஆணையர் பணியிட மாற்றம் |
24-10-2023 சிவகாசி மாநகராட்சியில் கவுன்சிலர்களின் அழுத்தம் காரணமாக ஆணையர் பணியிட மாற்றம் சிவகாசி மாநகராட்சியில் ஆளும் திமுக கவுன்சிலர்களின் அழுத்தம் காரணமாக பொறுப்பேற்ற 6 மாதத்திற்கு உள்ளாகவே ஆணையர் சங்கரன் இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் ஏற்கனவே பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இணை இயக்குநர் நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்தார். தாமிரபரணி கூட்டு திட்டம் தொடக்கம், புதிய பேருந்து நிலையம், புதிய மாநகராட்சி அலுவலகம், பாதாள சாக்கடை திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்வது, 9 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்வது ஆகியவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உட்கட்சி பூசல், மாநகராட்சி அதிகாரிகள் மீது திமுக கவுன்சிலர் லஞ்ச புகார் கூறியது, ஆணையருக்கு கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்த புகார் உள்ளிட்ட அடுத்தடுத்த சர்ச்சைகள் காரணமாக ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் மாதம் கடலூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றிய சங்கரன் சிவகாசி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி, குப்பைகளை தரம் பிரித்தல், நள்ளிரவில் ரோந்து பணி, தினசரி அதிகாலை வார்டு வாரியாக ஆய்வு பணி, பூங்காக்களை சீரமைத்தல், நகரை அழகு படுத்துதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்தார். அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கி பணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார். டெண்டர் விவகாரங்களில் கறாராக செயல்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்தியது சர்ச்சையானது. இந்நிலையில், கவுன்சில் கூட்டத்தில் மாமன்ற விதிப்படி கவுன்சிலர்களை செயல்படுமாறு அறிவுறுத்தியதால் அதிருப்தி அடைந்த திமுக கவுன்சிலர்கள் ஆணையரை மாற்றும் படி அழுத்தம் கொடுத்தனர். கடந்த மாதம் நடந்த கவுன்சில் கூட்டத்தை பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணித்தது சர்ச்சை ஆனது. கடந்த மாதம் சிவகாசி மாநகராட்சியில் ஆய்வுக்கு வந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடமும், மாவட்ட அமைச்சரான தங்கம் தென்னரசுவிடமும், ஆணையரை மாற்றும் படி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன்பின் திமுகவில் இணைந்த 9 கவுன்சிலர்களும் ஆணையரை மாற்றா விட்டால் மீண்டும் அதிமுகவில் சேர போவதாக தெரிவித்த கரணத்தால் மாநகராட்சியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், பொறுப்பேற்ற 6 மாதத்திலேயே ஆணையர் சங்கரன் மாற்றப்பட்டு ஆவடி மாநகராட்சி உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சிவகாசி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் சிவகாசி மாநகராட்சியின் 3-வது ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |