SIVAKASI WEATHER
மத நல்லிணக்கம் பேணும் தெருக்கட்டுப் பொங்கல்

17-03-2024
மத நல்லிணக்கம் பேணும் தெருக்கட்டுப் பொங்கல்

சிவகாசியிலிருந்து திரு. கோபால் எழுதுகிறார்:

இப்போது ஹாப்பி ஸ்ட்ரீட் பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முன்னூறு வருடங்களுக்கு மேலாக தெருக்கட்டுப் பொங்கல் மாசி மாதம் அனைத்து ஊர்களிலும், பெரும்பாலான தெருக்களிலும் கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைவரும் வரியாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி கொண்டாடுவர். எங்கள் சிவகாசி PKSA தெருவில், 2002ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சேவியர் என்பவர் தனது குடும்பத்துடன் குடியேறினார். தெருக்கட்டுப் பொங்கல் நெருங்கும் வேளையில் தயக்கத்துடன் நோட்டீஸ் தந்தோம். உடனே வரியை தந்த அவர், தெருக்கட்டுப் பொங்கல் திருவிழா விளையாட்டுப் போட்டிகளில் தன் பெண் குழந்தைகள் இருவரையும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வைத்தார். சமபந்தி விருந்தில் குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து சாப்பிட்டார். அதற்கடுத்த வருடம் முதல் தன் வீட்டு கடவு பகுதியில் தெருக்கட்டுப் பொங்கல் விழாவிற்கு சமையல் செய்ய வேண்டிக் கேட்டுக்கொண்டார். எவ்வித தயக்கமும் இன்றி சமையல் பரிமாற துவங்கினார். இரவு நேரம் எங்கள் தெருவில் பொங்கல் செய்வது வழக்கம். பொங்கல் செய்ய வரும் சமையல்காரர்களுக்கு டீ கேன் இரவில் வாங்கி தருவார். நள்ளிரவில் அவரது மனைவி ராணி, தெருக்கட்டுப் பொங்கலுக்கு அலங்கார பேப்பர் ஒட்டும் சிறுவர்களுக்கு, மற்றும் சமையல்காரர்களுக்கு டீ செய்து தருவார். எங்கள் தெரு முத்தாலம்மனை தினமும் வேண்டுவார், 2020ம் ஆண்டு தெருக்கட்டுப் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்தார். அவரது இழப்பால் திருவிழாவில் மக்கள் சோகத்துடன் இருந்தனர். அவர் இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தார் திருநகரில் (மதுரை) குடியேறி விட்டனர். அவர் வேண்டியது போல் தன் குழந்தைகள் முதுநிலை பட்டம் பெற்று நல்ல உத்யோகத்தில் உள்ளனர். சென்ற வாரம் தன் கனவில் தன் கணவர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுவது போல் வந்ததை தொடர்ந்து, மீண்டும் எங்கள் தெருக்கட்டுப் பொங்கலுக்கு ஜிபே மூலம் வரி செலுத்தினார். அவர் இறந்த பின் ஒவ்வொரு வருடமும் எங்கள் தெருவில் கேட்கும் வாசகம் "சேவியர் இருந்திருந்தால், இந்நேரம்....". எங்கள் தெரு மக்கள் சார்பாக முத்தாலம்மனை வேண்டுகிறோம் சேவியர் அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய. பல தெருக்களில் இது போல் பல சேவியர்கள் உள்ளனர். எங்கள் ஊரைப் போல் உங்கள் ஊர்களிலும் தெருக்கட்டுப் பொங்கல் கொண்டாடுங்கள் சமூக நல்லிணக்கம் பேணுங்கள்.


News & Events
top