SIVAKASI WEATHER
சிவகாசி சுற்றுச்சாலைத் திட்டம் தொடங்குகிறது

11-08-2024
சிவகாசி சுற்றுச்சாலைத் திட்டம் தொடங்குகிறது

சிவகாசி சுற்றுச்சாலைத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த மாதம் (செப்டம்பர்) ஆரம்பமாக உள்ளது. முதல் கட்டமாக சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் பூவநாதபுரம் விலக்கிலிருந்து வடமலாபுரம் வரை 10.4 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற உள்ளன.

சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விருதுநகா், சாத்தூா், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், எரிச்சநத்தம் ஆகிய சாலைகளை இணைத்து ரூ.150 கோடியில் சுற்றுச்சாலை அமைக்க 2012-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த சுற்றுச்சாலை கீழத் திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, கொங்கலாபுரம், ஆனையூா், ஈஞ்சாா், வடபட்டி, நமஸ்கரித்தான் பட்டி, திருத்தங்கல் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன் பிறகு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

2021-இல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா், சுற்றுச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, 2021-இல் இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுற்றுச்சாலைத் திட்டத்துக்காக 52 நில உரிமையாளா்களிடம் 132.8 ஹெக்டோ் பட்டா நிலம், 14.8 ஹெக்டோ் அரசு நிலம் என மொத்தம் 147.8 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 33.5 கி.மீ. தொலைவு சுற்றுச் சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

தற்போது சுற்றுச்சாலைக்கான நில எடுப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சுற்றுச்சாலைப் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன. முதற்கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூா்-விருதுநகா் சாலையை இணைக்கும் வகையில் பூவநாதபுரம் விலக்கிலிருந்து, வடமலாபுரம் வரை 10.4 கி.மீ. தொலைவுக்கு சுற்றுச்சாலைப் பணிகள் வருகிற செப்பம்பா் மாதம் தொடங்கப்பட உள்ளன.

இந்தச் சாலையில் கீழத் திருத்தங்கல், ஆனையூா் பகுதியில் ரயில் பாதை செல்லும் இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சுற்றுச்சாலைத் திட்டம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்போது, சிவகாசியிலிருந்து கழுகுமலை, சாத்தூா் பகுதிகளுக்குச் செல்வது எளிதாக இருக்கும். இதன் மூலம் சிவகாசி நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றாா் அவா்.


News & Events
top